Your comments

Thursday, September 15, 2011

ஞானப்புகழ்ச்சி - ஷிர்க் பாடல்களா?! - Part 2

இனி பீரப்பாவின்  ஞானப்புகழ்ச்சி பாடல்களில் காணப்படும் ஹிந்து மத கொள்கையான 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே - அதாவது எல்லாம் கடவுள்தான் ) எனும் ஹிந்துக்களின் நாமகரணத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் கீழ்கண்ட பாடல் வரிகளை பார்ப்போம்.
இதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள் நமக்கும் தெரியப்படுத்தினால் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்

1.  "  நீயே யுனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் "  ஞானப்புகழ்ச்சி 118
2.  "  நீயே  இப்புவிக்குள் ரசூலாக வந்தவன் " - ஞானப்புகழ்ச்சி 118
3.  சக்தியாய் சிவனாய் யிந்த தாரணி தன்னிலாக்கி - ஞானப்புகழ்ச்சி – 4
4.  "  சிவனேன் றேழூன்தூக்கத்துள்ளோ ரொளியே தெரிசித்தபின் - ஞானப்புகழ்ச்சி 404
5.  " சுக்கோ சிவனிருப்பன் சோணிதமோ வல்லவிஞ்சி- ஞானப்புகழ்ச்சி  23 
6.  சிவனருணன் றோழுகையினுக் குரியவனு நீயே - ஞானப்புகழ்ச்சி – 54
7.  " வருணனுடல் பதறியுயர் வரவருள்வை நீயே – ஞானப்புகழ்ச்சி – 64
8.  " கருடனினை  விட்டெனைப்படைத்த ஹக்கே யெனது  தீவினையால் ஞானப்புகழ்ச்சி – 82
9.  " கால்பிடித்து தூங்கியிரு கண் விழித்தோருக்கு திருமால் கொடுத்து காண வரும் வல்லோனே  வேல்பிடித்து - ஞானப்புகழ்ச்சி பாடல் – 568
10.  மானைப் புலியாயு மயிலையுமுன் னீன்ற பெருமானை திருவாசமுறும் வல்லோனே   ஞானமுறு - 575
11. " திருப்பதியிற்  சொல்லாமல் தீங்கு பல பாவமுஞ்செய் - ஞானப்புகழ்ச்சி பாடல் – 580
12. " எண்ணு மெழுத்தி லொளியுருவா யெவ்வுயிர்க்கு மன்னன் சிவமய மென்றாள்பவனே குன்னென்றுல-  587
13. " பாற்கடலும் பச்சை பவளக் கடலுந் தரளப் பூக்கடலும் நூலும் பொலிவானவனே - ஞானப்புகழ்ச்சி பாடல் – 605
14. " தேவர்க் கரிய குலக் கொழுந்தே - ஞானப்புகழ்ச்சி – 357
15. " ககன மதினந் தரமேழுங் கைலாசமு மரசாள்பவனே சிவனேன்றியம்ப வரமளித்த - ஞானப்புகழ்ச்சி பாடல் – 358
16. வாசிகள் வாசி யெனும் வலம்புரி சங்கீன்ற மணி யோசைக்கு ளோசை தரு முட்பொருளே- ஞானப்புகழ்ச்சி – 556
17. " காபிர்களும் பேய்களும்  நற் கமல நாரணனும் பல் தேவர்களும் போற்றி நின்ற சீமானே - ஞானப்புகழ்ச்சி – 550
18. " ஈரா ரெழுத்திலிருப்பவனே  ஈராறும்  ஓதாத மந்திரத்தி னுட் பொருளே ஞானப்புகழ்ச்சி 540
19 . "ஜின்னும் வெகு சீவனுறு தேவுகளு  நீயே - ஞானப்புகழ்ச்சி பாடல் – 60
20. " சிலையோடி வருமுனுயிர் சிதறாமல் நல்லுதவி செய்வாய் நிறைந்த பொருளே -– 126
21. " ஆவன்றும்  ஈயென்றும்  ஊவென்றும்  நின்றவுனையாரென் றிறைஞ்ச  வடியேன் ஞானப்புகழ்ச்சி பாடல் – 127
22. " நாய்கண்டு சீயென்ற நடுவேயிருந்தெனது  நாட்டம தறிந்த வனுநீ ஞானப்புகழ்ச்சி– 128
23. " முத்தரள மொன்றாய்  முளைத்த சிவமரத்தின் வித்தாக  வந்து விளைந்தோனே சித்துநவஞானப்புகழ்ச்சி– 564
24. " யோகிகளுக்கு குருவாணவனே  யெமதுள்ளத் தெழுந்தருளே ஞானப்புகழ்ச்சி பாடல் – 425
25. " ஒமேன்றதையன் புறுமதுவு ளிவுமடியே னுணராமல்  ஞானப்புகழ்ச்சி பாடல் – 270
26. "   Page  125  ல் ஞானப்பூட்டு பாடலை எந்த ராகத்தில் பாட வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது - கீர்த்தனை , ராகம் உசேனி , தாளம் ரூபகம் - இஸ்லாமிய கீர்த்தனைகளா ?
27. "   வேத நூல் சாஸ்திரங்கள் மேய்யிதனை யன்றி வெகு  பார நூற் கற்றார் பலனில்லை - ஞான மணிமாலை - 179 
28. "   Page  190  ல் ஞானக்குறம் பாடல் பாட வேண்டிய முறை - கீர்த்தனம் , ராகம் புன்னாகவராளி - சாப்புதானம் , இனி பாடல்  வரிகள்- கைதாருங் கைதாரும் ஹபீபு முஹம்மத் அப்துல்  காதிரே கைதாருங் கைதாரும் -  இவர் யார் ? முஹியுத்தீன் அப்துல் காதரா?
29. "  Page  197  ல் ஞான ரத்தினக்குறவஞ்சி  பாடல்கள் - அதாவது சிங்கா சிங்கி குறத்தி ஸ்டைலில் இந்த பாட்டை   பாட வேண்டும் - - உதாரணத்திற்கு இதோ கீழே
                                          i.    ஆதிக்கு   முன்ன ரனாதியு  மென்னடி  -    சிங்கி 
                                        ii.    அதுஅந்த கருக்குழி முந்த விருளரை -  சிங்கா
30. page  -205  ஞான ஆனந்தக்களிப்பு - கள்ளனை காவலனாக வைத்து  தானும் கள்ளனுக்குள்ளே கலந்தேயிருந்து
31. page  -212  திரு மெஞ்ஞான சரநூல் - திருவான தேவர் முதற் பெரியோர்  மற்ற தேவரையுந்த் திருமுன்னே வரவழைக்க குருபாதம் பணிந்துமுப தேசங்  கேட்கக் கொள்ளையிடப் பதியேறக்   குளிக்க நீரில் 
32. page  -217 ஞான நடனம் - தாமரை ரண்டி லிருந்து வாடியதாபரமே குருவே பூமதுவாகிய வாசமி லோசை புரிந்தே இருப்பவனே தேனமு துங்கனி - வாயமு துண்டு திருந்திய செம்மதியால் நீவரும் யானறி யும்படி யேதரு வாய்நீ - ஹூ ஹூ ஹூ

சந்தேகம் : பீரப்பா பாடியதாக சொல்லப்படும் இந்த  ஞானப்பாட்டுக்களின்   தொகுப்பை உண்மையில் பீரப்பா பாடியது இல்லை எனவும் , பீரப்பாவின்  சமாதிக்கு பக்கத்திலே சமாதியாகி இருக்கும் யகீன் முஹம்மது (?!) என்று சொல்லப் படுபவர் அதாவது இவர் முதலில் ஹிந்துவாக இருந்து பின்பு பீரப்பாவின் சீடராக மாறியவர் , இவர்தான் பீரப்பாவின் மனதில் தோன்றியதை பாடலாக எழுதினர் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது ஒருவேளை உண்மையாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது காரணம் நான் மேலே குறிப்பிட்டுள்ள பாடல் வரிகளை உன்னிப்பாக நீங்கள் கவனித்து படித்து பார்த்தால் ஹிந்து கலாச்சாரமும் அதனோடு தொடர்புடைய வார்த்தைகளும் சரளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதோ அதற்கான உதாரணங்கள் 

சக்தி, சிவன், வருணன்  ,  கருடன்,  வேல்பிடித்து,  திருமால், மான் , மயில் , திருவாசம், திருப்பதி, சிவமயம் ,   தேவர், கைலாசம், சிவனேன்றியம்ப, வலம்புரி சங்கு , நாரணனும், பல் தேவர்களும் , பாற்கடல்,  பச்சை பவளக்கடல், தேவுகள், சிலையோடி, சிவமரத்தின் வித்து, சித்து நவ , யோகிகள், ஓம் ,  வேத நூல் சாஸ்திரங்கள் , குருபாதம்  , தாமரை  - இப்படிப்பட்ட வார்த்தைகளை  எல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் ஞானப்பாட்டில் (?!) இடையிடையே மிக சரளமாக சர்வ சாதாரணமாக புகுத்தப்படுத்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. மேலும் அல்லாஹ்வை பற்றிக் குறிப்பிடும் போது வென்றும் வென்றும் , வென்றும் நின்றவுனை என பாடப்படுள்ளது... அஸ்தஃபிருல்லாஹ்..... இதையெல்லாம் நாம் படிக்கும் போது ஹிந்து மத சாஸ்த்திரங்களை படித்த உணர்வே ஏற்படுகிறது  

 இப்னு அரபி எனும் ஸூஃபி. இந்த இப்னு அரபிதான், தன் காலத்துக்கு முன் இருந்த ஸூஃபிக் கோட்பாடுகளை எல்லாம் நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பினார். 'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரணமும் இவரால்தான் சூட்டப்பட்டது. இவர் எந்த அளவுக்கு வழிகேட்டில் ஊறித் திளைத்தார் என்பதை அவருடைய கவிதைகளைப் படித்த மாத்திரத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.இபுனு அரபி பாடுகிறார்:
வெவ்வேறு படிமங்களுக்கு என் இதயம் திறந்தே கிடக்கிறது. இது கிறித்துவ சந்நியாசிகளின் துறவுமடம்; சிலைகள் கொலுவிருக்கும் கோயில்; அரபு நாட்டு மான்களின் மேய்ச்சல் வெளி; ஹஜ் பயணிகளுக்கு இது கஃபாப் பள்ளி; தவ்ராத்தின் வரைபலகையும் இதுவே; குர் ஆன் வேதமும் இதுவே; நான் அன்பு எனும் மதத்தையே அனுஷ்டிக்கிறேன். அதன்  பயணம் எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும் சரியே. அன்பு எனும் மதமே என்னுடையது; அதுவே  என் நம்பிக்கை.

சமயங்களின் பெயரால் பிரிவினை பேசுவதை ஸூஃபிகள் வெறுத்தனர். எல்லாச் சமயங்களும் மூலநிலையில் ஒரே உண்மையைச் சொல்கின்றன என்பது ஸூஃபிகளின் நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இப்னு அரபியிடம் இப்படிக் கவிதையாக உருவெடுக்கிறது.இறைவன் மனிதனாக அவதரிக்கிறான் என்பதும் மனிதனில் இறைவனைக் காணலாம் என்பதும் இப்னு அரபியின் கோட்பாடாகும். இறைவன், தன்னை அறிந்து கொள்வதே மனிதன் வாயிலாகத்தான் என்கிறார் இப்னு அரபி:

அவன் என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி அவனுடைய சாயலில் என்னைப் படைத்து என்னைப்  புகழ்கிறான். நான் அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி அவனுக்குக் கீழ்ப்படிந்து அவனைப் புகழ்கிறேன்.அவன் எப்படி என்னிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க முடியும்? இதற்காகவேதான் நான் படைக்கப் பட்டிருக்கிறேன். நான் அவனை அறிகிறேன்;  அவனுடைய உள்ளமையைக் கொணர்கிறேன்.

இஸ்லாத்தில் மட்டுமில்லாமல் ஏனைய மதங்களிலும் தெய்வீக உண்மைகள் பொதிந்திருக்கின்றன; அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இப்னு அரபியின் கருத்தாகும்.

எல்லாப் பொருட்களும் இறைவனின் குடும்பத்தைச் சார்ந்தவையே மனிதர்கள் உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்
ஒருவரையொருவர் பழித்துக் கொள்கின்றனர் காரணம், அவர்கள் வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்
அவர்கள் தங்களிடம் குறைபாடுடைய கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றனர் ஆனால், இறைவனுக்கு எல்லா வடிவமும் உண்டு; மேலும் அவனுக்கு எந்த வடிவமும் இல்லை அவன் வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்
மனிதர்கள் மாறுபட்ட கடவுள் கொள்கைகளைப் பின்பற்றிக் கொண்டனர் ஆனால், நானோ ஒரே நேரத்தில்
எல்லாவகையான கடவுள் கொள்கைகளையும் கொண்டிருக்கிறேன்.

வெவ்வேறு மதத்தினரையும் அன்பினால் தழுவிக் கொள்வதற்கேற்ற வகையில் சயமப் பொறுமையையும் அனுசரித்துப் போதலையும் கைக்கொள்ள வேண்டும் என்கிறார் இப்னு அரபி."ஒரே உண்மைப் பொருளின் ஒப்பற்ற ஜோதிதான் பள்ளிவாசலிலும் கிறித்துவ திருச்சபைகளிலும் கோவிலிலும் எரிகிறது" என்பது இப்னு அரபி போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் கருத்தாகும்.  
இப்னு அரபி, பீரப்பா, குணங்குடி மஸ்தான், உமறுப்புலவர் போன்றவர்களின்  பாடல்களில் ஷிர்க்கான வரிகள்  இருக்கிறது.  நாமும் பொருள் தெரியாமல் எதோ நன்மைதான்  கிடைக்கும் என்ற எண்ணத்தில், நம்பிக்கையில்  விடிய விடிய இந்த மாதிரியான பாட்டுக்களை படிக்கிறோம்

ஸூஃபிஸம் என்ற போதை மருந்து
“ ஸூஃபித்துவக் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். ஸூஃபித்துவம்  என்பது பிளாட்டோவின் கருத்துக்களுடன் இந்து சமயத்தின் வேதாந்த சித்தாந்தங்கள் கலந்தது. மேலும் ஸூஃபித்துவம், போதை தரும் விஷம் கலந்த மதுபானம். இக்கருத்துக்கள்  குர்ஆனின் தெளிவான சட்ட திட்டங்களுக்கு முரண்பட்டது ” என்கிறார் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால்.

ஆகவே சகோதரர்களே ! இதுநாள் வரை அர்த்தம் தெரியாமல் படித்தோம் , இப்படிப்பட்ட கொள்கையுடைய   பாட்டுக்களை பாடுவதால் நன்மையா ?  நாளை மறுமையில் அல்லாஹ்  நம்மிடம்  ஏன்  ஞானப்புகழ்ச்சியை படிக்கவில்லை..... என கேள்வி கேட்பானா????????!!!!!!!!!!!!!!!!!!! நிச்சயமாக இல்லை சகோதர்களே !...... அதே சமயம் ஷிர்க்கான வரிகள்  கொண்ட பாடல்களை பாடுவதால் பெரும் பாவத்தைதானே  எளிதாக சம்பாதித்துக் கொள்ள முடியும். குர் ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் அதே சமயம் இந்த ஞானப்புகழ்ச்சியை படித்தால்  நன்மையா கிடைக்கும்?  பெரும் பாவம் அல்லவா நம்மிடம் சேருகிறது.



இந்த ஞானப்புகழ்ச்சியை விடிய விடிய படிக்கிற சம்மந்தப்பட்ட சகோதரர்களே !

நடு  நிலையுடன்   நீங்களே உங்களை, உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்? எதற்காக இதை படிக்கிறீர்கள் ?  ஏதாவது பொருள் தெரியுமா? பொருள் தெரியாமல் படிப்பதனால் என்ன பயன்யாருக்கு விளங்கும் ? உண்மையான பொருள் தெரிந்தால் ஒரு முஸ்லிமால் படிக்க முடியுமா ? ராகமுடன் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்பதாலா? நம்முடைய வாப்பாவலியாப்பாஉப்பாமுப்பாட்டனார் இப்படி இவர்களெல்லாம் படித்தார்கள் அதனால் நாமும் படிக்க வேண்டும் என்பதாலா?  அல்லது இதை படித்தால் நமக்கு பீரப்பா அவ்லியாவின் (?!) அருள் (?!) கிடைக்கும் என்பதாலாஇதை படிக்காவிட்டால் பீரப்பா அவ்லியா  நம்மீது  கோபப்பட்டு அல்லாஹ்விடம்  சிபாரிசு செய்து தண்டனை வாங்கி தருவாரா? நமது  இஸ்லாமிய மார்க்கம் அனுமதித்த செயலா? அல்லது அல்லாஹ்வும்  ரசூல்  (ஸல்) அவர்கள்  காட்டி  தந்த  சுன்னத் என்பதாலாயோசித்து பாருங்கள் சகோதர்களே ..... இத்தனை கேள்விகளுக்கும் சேர்த்து ஒரே பதில் தான் இருக்க முடியும் .. அதாவது   மாற்று மதக் கலாச்சார அனாச்சாரங்களை இஸ்லாம் என்ற பெயரிலும்நன்மை என்ற பெயரிலும் நம்மிடையே புகுத்தி நன்மை என்கிற விஷயமா ஆக்கி விட்டார்கள் என்பதே நிதர்சனம்.  
ஆகவே அன்பு சகோதரர்களே !  ஸூஃபிஸமாயிருந்தாலும் அத்துவைதமாக இருந்தாலும் அல்லது வேறெந்தத் தத்துவமாக இருந்தாலும் அவற்றை குர்ஆன்-ஹதீஸில் ஒப்பிட்டுப் பார்த்து, குர்ஆன்-ஹதீஸுக்கு முரண்படுபவற்றைத் தூக்கித் தூர எறிவோமாக!.... குர்ஆன்-ஹதீஸை மட்டுமே பின்பற்றி, உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போமாக!

இந்த பாவ செயலை இனியும் செய்து பெரும் பாவத்தை சம்பாதிக்கத்தான் வேண்டுமா? என்பதை நன்றாக சிந்தித்து இந்த பித்அத்தான   செயல்களிலிருந்தும்,  இப்னு அரபி, பீரப்பா, குணங்குடி மஸ்தான், உமறுப்புலவர் போன்ற வர்களின் ஸூஃபிக் கோட்பாடுகளான  'வஹ்தத்துல் உஜூது' (இயல்வன யாவும் இறையுருவே) எனும் நாமகரண கொள்கை களிலிருந்தும், ஷிர்க்கான பாடல்களிலிருந்தும்   நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டு உண்மையான இஸ்லாத்தை முறையாக அறிந்து இறை அச்சத்துடன் நமது மார்கத்தை அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் கடை பிடிக்க எல்லாம்   வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை செய்யட்டும் என வேண்டிக்கொள்வோம்.

இப்படிப்பட்ட ஞானப்புகழ்ச்சி பாட்டை  யாரும் படிக்கவில்லை எனில் எவ்வித குற்றமும் கிடையாது  என்பது  சந்தேக மில்லாத மிகத் தெளிவாக உண்மை ஆனால் சகோதர சகோதரிகளே நான் மேல் குறிப்பிட்டது போல ஷிர்க் நிறைந்த இந்த ஞானப்பாட்டை பாடுவதால்  அல்லாஹ்  நம்மை குற்றம் பிடிப்பானே அப்போது நாம் கைசேதப்பட்டு  நிற்பதில் என்ன பிரயோஜனம் ? நன்றாக யோசித்து பாருங்கள். இதையும் மீறி மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட ஞானப்புகழ்ச்சி பாட்டை பாடுவதால் நன்மைதான் என  நீங்கள் துணிந்தால் அல்லாஹ் மற்றும் ரசூல் (ஸல்அவர்களின் கட்டளைகளை மீறிய செயல்களை செய்ய துணிகிறீர்கள்  என்பதில்   சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது.
ஆகவே ஞானப்பாட்டை(?!) பாடாமல் , அந்த விழாக் கோலங்களில் கலந்து கொள்ளாமல் அல்லாஹ்வுக்காக  புறக்கணி யுங்கள், மேலும்   இந்த தர்ஹா திருவிழாவான மாபாதகமான செயல்களிலிருந்து  இருந்து  நம்மையும் நம் குடும்பத் தார்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா ? அல்லது  விமரிசையான கொண்டாட்டத்தை கொண்டாடி பாவங்களை அள்ளித்தரும் பித்அத் செயல்களை செய்து மகா பாவத்தை அள்ளிக் கொள்ளத்தான் வேண்டுமா ? அன்பு சகோதர சகோதரிகளே சுயமாக சிந்தித்து நீங்களே அல்லாஹ்வுக்கு பயந்து முடிவு செய்து கொள்ளுங்கள்.  
 59:10.அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

3:8 “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)

வஸ்ஸலாம்
தவ்ஹீத் குரல்

வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்

No comments: