Your comments

Monday, September 19, 2011

கத்னா செய்வதற்கு ஊர் ஜமாத்திடம் அனுமதி வேண்டுமா?

 
கத்னா செய்வதற்கு ஊர் ஜமாத்திடம் அனுமதி வேண்டுமா? எங்கே செல்கிறது இந்த சமுதாயம்?!
தமிழகத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அஞ்சுவன்னம் பீர்முகம்மதிய்யா முஸ்லிம் அசோஷியேஷன் (அபீமுஅ) ஜமாத்தில் ஒருவர் தன்னுடைய மகனுக்கு கத்னா செய்ய வேண்டுமென்றால் (மருத்துவமனையில் வைத்து செய்வதாக இருந்தாலும்) ஊர் நிர்வாகத்திடம் அப்ளிகேஷன் கொடுக்க வேண்டும் பின்னர் இதற்காக நிர்வாகிகள் (?!) கூட்டம் கூடி எத்தனை ரூபாய் வாங்கலாம் என முடிவு செய்வார்கள்.
இது வரி என்ற பெயரிலோ, நன்கொடை என்ற பெயரிலோ அல்லது தர்ஹாவின் பெயரை சொல்லியோ சம்மந்தப்பட்டவரை அழைத்து குத்து மதிப்பாக ஒரு தொகையை கட்ட சொல்வதை பரம்பரை(?!) வழக்கமாக(?!) கொண்டுள்ளார்கள் என்பதாக நாம் அறிகிறோம். இதை ஒரு ஊர் சட்டமாகவும்(?!) ஆக்கி வைக்கபட்டுள்ளது என்பதையும் அறிகிறோம்.
இது விஷயத்தில் அப்ளிகேஷன் கொடுத்து அனுமதியும் (?!), பணமும் (?!) கட்டாதவர்களை தண்டிப்பதற்காக(?!) ஊர் நிர்வாகத்தை ஸ்பெஷலாக கூட்டி சம்மந்தப்பட்டவரையும் அவருடைய குடும்பத்தையும் ஊர் விலக்கு செய்து தொழுகை பள்ளியில் ஊர் மக்களுக்கு பகிரங்க அறிவிப்பும் செய்வார்கள்.
கடந்த 02.09.11 ஜும்ஆ தினத்தன்று இப்படிப்பட்ட கேலிக்குரிய ஒரு ஊர் விலக்க (குடும்ப ஊர் விலக்கம்) அறிவிப்பை சம்மந்தப்பட்டவரையும் அவரது குடும்பத்தையும் தண்டிக்கும் (?!) வகையில் ஒழுங்கு நடவடிக்கை(?!) என்ற பெயரில் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதிய்யா முஸ்லிம் அசோஷியேஷன் நிர்வாகிகள் (?!) அரங்கேற்றி சமுதாய நலனை (?!) மட்டுமே கருத்தில் கொண்டு பாரம்பரியத்தை(?!) காப்பாற்றியும் அந்த நபரை வெளியேற்றியும் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நடவடிக்கையில் ஒருவேளை சிலருக்கு அற்ப சந்தோஷமும், மனதிற்கு திருப்தியும் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு என்பதை அவர்களின் செயல்கள் மூலமாக நாம் அறிய நேரிடுகிறது.
இந்த தவறான, கேலிக்குரிய, முன்னோர்களால் காட்டி தந்த மூட நம்பிக்கைகளிலான கலாச்சார அனாச்சார சீரழிவுகளால் எடுக்கப்படும் முற்றிலும் நியாயமில்லாத இந்த அற்ப முடிவான குடும்ப ஊர் விலக்கம் போன்ற முடிவுகளை மறு பரிசீலனை செய்து இப்படிப்பட்ட ஏளனத்திற்குரிய சட்டத்தை (?!) உடனே தூக்கி எறிவது உண்மையிலேயே அறிவு பூர்வமான நியாயமான செயலாக இருக்கும் என்பதை இங்கே நாம் பதிவு செய்து கொள்கிறோம். இது போன்று இன்னும் எத்தனை குடும்பங்களை ஊர் விலக்கம் செய்ய இந்த நிர்வாகம் உத்தேசித்திருக்கிறது?
இப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பதால் இவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி யாராவது பயந்து திருந்துகிறார்களா? இதுவா சுன்னத்துல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் மக்களின் நிர்வாக நடவடிக்கை? சரி கத்னாவால் (ஆணுக்கு மட்டும்) இந்த நடவடிக்கை என்றால்....பெண்ணுக்கு என்ற நிலை வரும்போது கல்யாணத்திற்கு மட்டும்தான் அனுமதியும் நன்கொடையும் கொடுக்க வேண்டும் பெண் பிள்ளைகள் வயதுக்கு வரும் விஷயத்தை ஏனோ (???!!!) விட்டு விட்டார்கள் ஏன் இவர்கள் பாரபட்சம் காட்டுகிறார்கள்? பாரம்பரியத்தில் சொல்லப்படவில்லையா? இது என்ன நடை முறை? என்ன பாரம்பரியம்? என்ன ஊர் நிர்வாகம் இது ? நாம் வெட்கப்படவேண்டிய பாரம்பரிய நடவடிக்கை அல்லவா இது !
ஊர் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட அன்பு சகோதரர்களே, ஊர் நிர்வாகத்திற்காக மக்களா? அல்லது மக்களுக்காக ஊர் நிர்வாகமா ? இப்பட்டிப்பட்ட கேலிக்குரிய ஊர் விலக்கம் தேவைதானா? முறையானதுதானா? ஊர் நிர்வாகம் செய்வதற்கும், இஸ்லாத்திற்கெதிரான தர்ஹா கலாச்சார அனாச்சார சீரழிவுகளை விமரிசையாக நடத்துவதற்கும் வரி வசூலிப்பு என்ற பெயரில் நடத்தும் செயல் நரக நெருப்புக்குரிய செயலாகா ஆகிவிடாதா? அருமை சகோதரர்களே, மதிப்பிற்குரிய பெரியோர்களே சிந்தனை செய்து பாருங்கள். இவை அனைத்தும் சிந்தைக்குரிய சமுதாய நலன் கருதிய கேள்விகளே! சம்மந்தப்பட்டவர்கள் சிந்தனை செய்வார்களா?
நாம் அறிந்தவரை ஜமாத் மக்களுக்கும் இதெல்லாம் தேவையில்லாத, அனாவசிய நடவடிக்கை என்றே பரவலாக கருதுகிறார்கள் எனவே இது விஷயத்தில் ஜமாஅத் பொது மக்களின் கருத்தையும், நன்கு படித்த சமுதாய நலன் கொண்ட ஆலிம்களின் கருத்துக்களையும் அறிந்து அதன்படி செயல்படுவது ஜமாத்தை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகளுக்கு தட்டி கழிக்க முடியாத சமுதாய நலன் சார்ந்த கட்டாயக் கடமையாகவே உள்ளது என்பதையும் இங்கே நாம் அன்புடன் உணர்த்திக்கொள்கிறோம்.
அதே சமயத்தில் வீம்புக்காக நாங்கள் அப்படித்தான் செய்வோம் இதுதான் எங்கள் ஊர் நடைமுறை, இதுதான் எங்கள் ஊர் சட்டம் , இது போன்று வரி வசூலித்து ஜமாத்தை (?!) நடத்துவதற்கும் (?!), தர்ஹாவை (குஃப்ரை) நிர்வகிப்பதற்கும்(?!) இதை விட்டால் எங்களுக்கு வேறு வழியே தெரியாது, வேறு வழிகளும் கிடையாது என்பது எங்களுக்கு ஏற்கனவே தெளிவாக தெரியும்.
ஆகையால் இப்படித்தான் நாங்கள் செயல்படுவோம் என்றோ அல்லது எங்கள் பரம்பரை சட்டத்தை எதற்காகவும், யாருக்காகவும் விட்டு கொடுக்கவே மாட்டோம் என்பது போலவும். மேலும் ஜமாத்தை சார்ந்த இஸ்லாத்தை முறையாக அறிந்திராதவர்கள், மற்றும் ஒருவர் தன்னை முஸ்லிம் என்று சமூகத்திற்கு அடையாளம் காட்டக்கூடிய முக்கியகடமையான தொழுகையை முறையாக நிறைவேற்றிடாத ஒரு சில சகோதரர்கள் போன்றோர் தம்பட்டம் அடிப்பது போல் நிர்வாகம் செய்ய முற்படுமேயானால் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட நிர்வாகத்தை நாம் அறிவுறுத்தக்கடமைப் பட்டுள்ளோம் என்பதனை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புக்குரிய சகோதரர்களே!,
ஜமாஅத் மீது அக்கறை கொண்ட மக்களே!
தைரியமாக உங்கள் கருத்தை சொல்ல துணியுங்கள், மூட பழக்க வழக்கங்களையும், கேலிக்குரிய பரம்பரை வழக்கங்களையும், சட்டங்களையும் இனியும் அனுமதிக்காதீர்கள். ஊர் நிர்வாகத்தை இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஒரு செயல்பாடுகளையும் செய்வதற்கு கண்டிப்பாக அனுமதிக்காதீர்கள். இஸ்லாமிய முறையில் நிர்வாகத்தை நடத்துவதற்கு உரிய மக்களை தேர்ந்தெடுத்து ஊர் சட்டங்களை பயனுள்ள முறையில், இஸ்லாமிய முறையில் சமுதாய மக்களின் நலன் கருதி மாற்றி அமையுங்கள்.
குறுகிய கண்ணோட்டங்கள் கொண்டவர்களையும், அடாவடித்தனம் செய்பவர்களையும், கோஷ்டி சேர்ந்து கலகம் விளைவிப்பவர்களையும், சமுதாய விரோத, மற்றும் மார்க்க விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், கண்டிப்பாக களை எடுங்கள், இப்படிப்பட்டவர்களை நிர்வாகம் செய்ய நிச்சயமாக தேர்ந்தெடுக்காதீர்கள். நல்லவர்களையும், மார்க்க சிந்தனையுள்ளவர்களையும், இறை அச்சமுடையவர்களையும், சமுதாய நலனை நோக்கமாக கொண்டவர்களையும், ஷிர்க்குகளில், பித்அத்துக்களில் ஈடுபடாதவர்களையும் தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்ய துணிய வேண்டும். அப்போதுதான். அல்லாஹ்வின் திருப்பொருத்தமும், அவ நின் கருணையும் இன்ஷா அல்லாஹ் நம் ஊருக்கும் நம் மக்களுக்கும் கிடைக்கும் என்பதனை நினைவில் கொண்டு ஊர் நிர்வாகத்தை நன் மக்களிடம் ஒப்படையுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இனியாவது ஜமாஅத் மக்களும், நிர்வாகமும் இஸ்லாமிய வரம்புகளை மீறாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து தனது சமுதாயக் கடமையை அக்கறையுடன் செய்ய முன் வருவார்களா?! முன் வரவேண்டும் என்பதே நமது நல்லெண்ணம். இன்ஷா அல்லாஹ் அதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன்
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்

No comments: